உதான் 2.0 திட்டத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்; தமிழகத்திற்கு மேலும் விமான நிலையங்களைப் பெற்றுத்தாருங்கள் – முதல்வர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை
2016 ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி
@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, “நாட்டின் சாமானிய குடிமகனும் வானில் பறக்க வேண்டும்” என்ற உயரிய நோக்கத்துடன் உதான் (UDAN – Ude Desh Ka Aam Nagrik) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தத் திட்டம் இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 95 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 663 விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3.41 லட்சத்திற்கும் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டு, 1.62 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை தற்போது ₹28,840 கோடி மதிப்பிலான உதான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் மற்றும் 200 ஹெலிபேடுகள் உருவாக்கப்பட உள்ளன. இந்தியாவின் பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக இது அமையவுள்ளது.
ஆனால், இந்தத் திட்டங்களின் முழுப் பயனைப் பெற மாநில அரசுகள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட வேண்டும். நில எடுப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு போன்றவற்றில் மாநில அரசுகளின் முனைப்பு மிகவும் அவசியமானது.
துரதிர்ஷ்டவசமாக, உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 95 புதிய விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்கள் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தமிழகத்தில் சேலம் விமான நிலையம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்தது. இது மாநில அரசின் போதிய முனைப்பின்மை மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்தாத அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் நில எடுப்பு மற்றும் நிர்வாக தாமதங்களால் தவறவிடப்பட்டுள்ளன.
எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதான் 2.0 திட்டத்தின் கீழ் உருவாகவுள்ள 100 புதிய விமான நிலையங்களில் தமிழகம் அதிகபட்ச பங்கைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, திருவண்ணாமலைக்கு விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயமாகும். உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுகிறது. இத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக நகரத்திற்கு விமான நிலைய வசதி இல்லாதது பெரிய குறையாகும். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைந்தால் ஆன்மிக சுற்றுலா, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சி பெரும் ஊக்கத்தைப் பெறும். நான் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது மக்களிடம் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றும் இதுவே ஆகும்.
அதேபோல், உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏற்கனவே விமான ஓடுதளம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமைக்கப்பட்டது . தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஓடுதளத்தை மேம்படுத்தி முழுமையான விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு பெரும் பயனளிப்பதுடன், தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும், தேனி மாவட்டத்திற்கும் விமான நிலைய வசதி அவசியமாகும். வேளாண்மை, தோட்டக்கலை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறைகளில் முக்கிய இடம் வகிக்கும் தேனி, மூணாறு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கான நுழைவாயிலாக உள்ளது. தேனியில் விமான நிலையம் அமைந்தால் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா மேம்பாட்டிற்கும் புதிய அத்தியாயம் தொடங்கும்.
எனவே, தமிழக முதல்வர் திரு விஜய்
@TVKVijayHQ @actorvijay அவர்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, உதான் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு அதிகபட்ச விமான நிலையங்களைப் பெற்றுத்தர வேண்டும். குறிப்பாக திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை மற்றும் தேனி ஆகிய பகுதிகளுக்கான விமான நிலையத் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தேவையான நில எடுப்பு, நிர்வாக அனுமதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.