🎁 சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ராம் சுப்பு என்பவர், "சார், நீங்கள் கன்னிமாரா நூலகத்துக்கு அளித்த புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்," என்று பின்னூட்டம் செய்திருந்தார்.
90-களின் நடுப்பகுதி அது. கன்னிமாரா நூலகத்தின் அந்தப் பின்பக்கப் படிக்கட்டுகளுக்கு நாங்கள் வைத்த பெயர் - 'ஜஹான் பனா' (Jahan Pana). அங்கேதான் நாங்கள் சந்தித்து, தேர்வுகளுக்காகப் படிப்போம், விவாதிப்போம், குறிப்புகள் எடுப்போம், மாதிரித் தேர்வுகள் எழுதுவோம். சென்னையின் கடும் வெயிலிலும், மழைக்காலத்திலும் எங்களை அரவணைத்த புகலிடம் அது.
அப்போது, ஒன்றிய குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்காகப் படிக்கும்போது, புத்தகங்களைத் தேடுவது ஒரு பெரும் போராகவே இருக்கும். முக்கியமான புத்தகங்களை யாராவது ஒளித்து வைத்துவிடுவார்கள். இருக்கும் பிரச்சனைகளுக்கும் அழுத்தங்களுக்கும் அந்தத் தேடல் வலி இன்னும் கடுப்பேற்றியது.
நான் இந்திய வெளியுறவுப் பணிக்குத் (IFS) தேர்வாகிச் செல்லும்போது, என்னிடமிருந்த தேர்வுக்கு உதவும் அந்தப் புத்தகச் சேகரிப்பை என்ன செய்வது என்று யோசித்தேன். சிரமப்பட்டு வாங்கியவை, அன்பளிப்பாக வந்தவை, பயனுள்ளவை. 📚
நூலகரைச் சந்தித்தேன். "பிரபலங்களின் புத்தகங்களை மட்டுமே அன்பளிப்பாக வருகின்றன," என்று முதலில் தயங்கினார். "இது வெறும் புத்தகங்கள் அல்ல, இனி வரும் மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் கருவி. அவர்களுக்குத் தனியாக ஒரு 'System' வேண்டும்," என்று வாதிட்டேன். ஒருவழியாய் கனிவுடன் சம்மதித்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு, பெய்ஜிங்கிலிருந்து விடுமுறையில் வந்திருந்தேன். அதே கன்னிமாரா நூலகத்தில், போட்டித் தேர்வுப் பிரிவில் பேச அழைத்திருந்தார்கள். உள்ளே சென்றபோது ஆச்சரியம்! மாணவர்களுக்குப் படிக்க, விவாதிக்க என்று ஒரு தனிப் பிரிவே உருவாகியிருந்தது. அங்கே என் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படிக்கட்டுகளின் நிழலில் படித்த காலம் மாறி, இன்று வசதியான அறையில் படிக்கும் மாணவர்களையும் நான் கொடுத்த புத்தகங்களையும் பார்த்தேன். 🪜
இப்போது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, "நீங்கள் கன்னிமாராவுக்கு அளித்த புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்," என்று பின்னூட்டத்தைப் பார்த்ததும், 'ஜஹான் பனா' நினைவுகள்.
கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது; அதை ஓர் அமைப்பில் கொண்டுவரும்போது நன்மை இருக்கிறது. அது தொடர்ந்து பயன்படுவதில் பெருநன்மையும் பேரின்பமும் உள்ளன. 🥰
நன்றி நண்பரே, அந்த நினைவுகளை மீட்டெடுத்தமைக்கு!
#CivilServices #PayItForward #SystemsApproach
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்