ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நடைபெறவிருக்கும் பிப்.12 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு தீர்மானம்!
கடந்த 2025 டிசம்பர் 22 ஆம் தேதி தலைநகர் தில்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்களின் தேசிய மாநாடு, ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து பிப்ரவரி 12 ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்த அடிப்படையில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆயத்த மாநாடு ஜனவரி 23 அன்று திருச்சியில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டி யுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, யுடியுசி ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், உழைக்கும் மக்கள் மாமன்றம், தொழிலாளர் விடுதலை முன்னணி, மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை உள்ளிட்ட மாநில தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும், அனைத்து தொழில் நிறுவனங்களிலும் சட்டப்படியான வேலைநிறுத்த அறிவிக்கை வழங்குவது என்றும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த மாநாட்டில் எல்பிஎப் கி.நடராஜன், சிஐடியு அ.சவுந்தரராசன், ஏஐடியுசி டி.எம்.மூர்த்தி, எச்எம்எஸ் மு.சுப்பிரமணி, ஐஎன்டியுசி டி.வி.சேவியர், ஏஐசிசிடியு க.ஞானதேசிகன், யுடியுசி அ.சேக்கிழார், ஏஐயுடியுசி வி.சிவகுமார் மற்றும் டியுசிசி எஸ்.மாயாண்டி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்.
மேலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி க.பாலகிருஷ்ணன், எல்எல்எப் க.பேரறிவாளன், உ.ம.மா சம்பத், எம்எல்எப் இரா.அந்திரிதாஸ் ஆகிய மாநிலத் தொழிற்சங்கத் தலைவர்களும் உரையாற்றினர். இவர்களுடன் வங்கி, காப்பீடு, பாதுகாப்புத் துறை மற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர் அமைப்புகளின் தலைவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
#Feb12Strike #GeneralStrike2026 #FightForWorkersRights #TradeUnionUnity #WorkingClassUnity