Mad(e) in Mayuram : A TITAN story...
(முன்னெச்சரிக்கை : மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு)
1988-89.
மாயூரம் கூறைநாடு கிட்டப்பா நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் நான் பன்னெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டம்..
திடீரென ஒருநாள் 2 மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கூட மைதானத்தில் உட்காரச் சொன்னார்கள்.
அங்கே வெளியாட்கள் சிலர் வந்திருந்தனர்.
“இவங்க டாட்டா கம்பெனியிலேருந்து வர்றாங்க. புதுசா வாட்ச் கம்பெனி ஆரம்பிச்சிருக்காங்க. அதுலே வேலைக்கு சேர்க்கிறதுக்காக வந்திருக்காங்க. இப்போ இண்டர்வியூ பண்ணிடுவாங்க. தேர்வானவங்களை 2 பரிட்சையெல்லாம் முடிச்சப்புறம் வேலைக்குச் சேர்த்துப்பாங்க” என்று அறிமுகப்படலம் நடந்தது. அது முடிந்து ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. பொது அறிவுக் கேள்விகள். எழுதிக் கொடுத்தோம். அங்கேயே திருத்தினார்கள். சுமார் 300 பேரிலிருந்து 45 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து நேரடித் தேர்வுக்காக நிறுவன அலுவலகம் அமைந்திருந்த ஹோசூருக்கு வரச் சொன்னார்கள். அதில் நானும் ஒருவன்.
டாட்டாவின் டைட்டன் நிறுவனத்திற்கான தேர்வு அது.
2 முடிக்கும் முன்பே அதில் வேலை கிடைத்தால் ரொம்பவே சூப்பர் என்பதாகத்தான் என் கூடத் தேர்வான 44 பேரின் மனநிலையாக இருந்தது. நானோ, “அதெல்லாம் தேர்வானால் பார்த்துக் கொள்ளலாம்” என்று இருந்தேன். போக வரும் செலவுத் தொகையை தந்து விடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்கள். என் வகுப்பில் மட்டும் ஆறு பேர் தேர்வாகியிருந்தோம். எல்லோரும் சேர்ந்து ஹோசூருக்குச் சென்றோம்.
ஹோசூர் டைட்டன் நிறுவனத்தில் நேரடித் தேர்வுக்கு அழைத்திருந்த அந்த சுபயோக சுபதினத்தில் முதல் நாள் இரவே திருவள்ளுவர் பேருந்தில் கிளம்பி அதிகாலையில் ஹோசூர் சென்று இறங்கினோம்.
குளிக்கவும், காலைக்கடன்களைக் கழிக்கவும் பேருந்து நிலையத்திலேயே இருந்த கட்டணக் கழிவறைக்குச் சென்றோம். மிக மிக மிக மிக கொடூரமான துர்நாற்றம் அடித்தது. குமட்டிக் கொண்டு வந்தது. இதற்கு குளிக்கவே தேவையில்லை என்று கிளம்பி வந்தேன். நண்பர்கள் சிலர் மட்டும் இருந்தாலும் பரவாயில்லை என்று ‘இருந்து’ விட்டு வந்தனர்.
நேரடியாக டைட்டன் நிறுவன அலுவலகத்துக்குச் சென்றோம். ‘என்னங்கடா.. பத்து மணி இண்ட்ரவியூவுக்கு ஆறரை மணிக்கே வந்துட்டீங்க?’ என்று அங்கே கேட்டு விட்டு வெளியிலேயே உட்கார வைத்தனர். கூப்பிடு தொலைவு வரை கடைகள் எதுவும் தென்படவில்லை. நண்பர்களாவது டீ குடித்து விட்டு வந்திருந்தனர். நானோ அதுவும் இல்லை.
ஓரு மணி நேரத்துக்குப் பிறகு அங்கிருந்த ஊழியரிடம் சென்று ‘டாய்லெட் எங்கே இருக்கு?’ என்று கேட்டேன்.
”அப்படியே கொஞ்ச தூரம் வெளியிலே நடந்து போய் யூரின் பாஸ் பண்ணிட்டு வந்திடு” என்றார்.
“இல்லைங்க.. டூ பாத் ரூம் போகணும்” என்றேன்.
“அதெல்லாம் முடியாது” என்று சொன்னவுடன் பேசாமல் வந்து உட்கார்ந்திருந்தேன்.
சுமார் ஒன்பதரை மணியளவில் உள்ளே சென்று அமரச் சொன்னார்கள். அப்போது யார் யார் வந்திருக்கிறோம் என்று பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டனர். எங்கள் பள்ளிக்கூட 45 பேரைத் தவிர வேறு சில ஊர்களிலிருந்தும் பல மாணவர்கள் வந்திருந்தனர்.
சுமார் பத்தரை மணியளவில் மூன்று அறைகளில் நேரடித் தேர்வு ஆரம்பித்தது. ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடங்களானது. உள்ளே சென்று வந்தவர்களிடம் விசாரித்ததில் ‘அசோகர் சாலையோரங்களில் என்ன நட்டார்?’ என்ற லேசான சிரமக் கேள்வியில் ஆரம்பித்து ஆரம்பித்து, ‘சைன் தீட்டா மைனஸ் காஸ் தீட்டா ஈஸ் ஈக்வல் ட்டூ வாட்?’ என்பது போன்ற மிகச் சிரமமான கேள்விகள் வரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இந்தக் கேள்விகளுக்கும் இவங்க இங்கே கொடுக்கப் போற வேலைக்கும் என்ன சம்பந்தமிருக்கும் என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஏற்கனவே இருந்த வயிற்றுவலியுடன் கூடவே தலைவலியும் வந்ததுதான் மிச்சம்.
” 1, 2 பாடங்களேருந்து கேள்வி கேட்டீங்கன்னா சொல்லிடுவேன். அதுக்கு முன்னாடின்னா கஷ்டம். நான் பத்தாம்ப்பு ஃபெயில் வேற” என்று சரண்டர் ஆகி விட வேண்டியதுதான் என்று நினைத்து உட்கார்ந்திருந்தேன்.
நண்பர்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. எனக்கு பசி இல்லையே தவிர வயிற்றுக்கும் இடுப்புக்கும் இடையே மிகப் பெரும் கலவரச் சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. திரும்பவும் போய் ”சார்.. பாத்ரூம் எங்கே இருக்கு?” என்று ஒருவரிடம் கேட்டேன். அவர் ஒரு வழியைக் காண்பித்து, “அங்கே போ” என்றார். அங்கே சென்றால் திரையரங்கங்களில் இருப்பது போல வரிசையாக ஒன் பாத் ரூமுக்கான ஏற்பாடுகள் இருந்தது. ஊழியர்களுக்காகவாம். அப்போது பணி நேரம். யாருமே இல்லை. இங்கே எங்கே டூ பாத் ரூம் செல்வது என்ற தவிப்பும் வந்தது. தவிப்புடன் திரும்ப வந்த போது ஒரு அலுவலர் ஒரு அறைக் கதவைத் திறந்து வெளியே சென்றார். கதவு மூடுவதற்கு முன் உள்ளே பார்த்தேன்.
அடடே.. கக்கூஸ்!
பரமானந்தத்தில் துள்ளிக் குதித்து உள்ளே சென்றேன். மிகச் சுத்தமாக இருந்தது கழிப்பறை. பல மணி நேரப் பிரச்னையை ஆற அமர தீர்த்துக் கொண்டேன். எல்லாம் முடித்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டினார்கள்.
’அட.. இருய்யா.. என்ன அவசரம்? நானெல்லாம் ஏழெட்டு மணி நேரம் வெயிட் பண்ணலை?’ - சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தேன்.
வெளியில் காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு நான்கு பேர் கோபப்பார்வையுடன் நின்று கொண்டிருந்தனர். அருகிலேயே இன்னொரு அதிகாரி.
“என்ன பண்ணிட்டு வர்ற?” - கோபத்துடன் கேட்டார் அங்கு நின்றிருந்தவர்களில் ஒரு மீசைக்கார்.
“கக்கூஸ் உள்ளே உங்கூரிலே எல்லாம் என்ன சார் பண்ணுவாங்க?” என்று இப்போவாக இருந்திருந்தால் கேட்டிருப்பேன். அந்தக் காலத்தில் அம்புட்டு விபரம் தெரியா பிஞ்சு நான்.
”அவசரமா.. டூ பாத்ரூம் வந்திடுச்சு சார்” என்று பயந்து கொண்டே சொன்னேன்.
“டூ பாத்ரூம் வந்திச்சுன்னா எங்கே வேணும்னாலும் போயிடுவியா?” என்று கேட்டார் இன்னொருவர்.
“இல்லை சார். கக்கூஸிலே மட்டும்தான் போவேன்” - இதுவும் இப்போவா இருந்தா சொல்லிருப்பேன். ஆனால் அப்போ சொல்லத் தெரியவில்லை.
மானாவாரியாகத் திட்டினார்கள்.
“இது மேனேஜருக்கான கக்கூஸ். இதிலே நாங்களே போக மாட்டோம். உனக்கு என்ன தைரியம்?” என்று திட்டினார்கள்.
“காலையிலேருந்து கக்கூஸ் எங்கே இருக்குன்னு எல்லார்கிட்டயும் கேட்டுட்டேன். யாருமே சொல்லலை. என்னதான் செய்யுறது? ஓரளவுக்கு மேலே அடக்க முடியலை சார்” என்று பரிதாபமாகக் கூறினேன். கூடவே முறைத்துக் கொண்டு நின்றிருந்த அதிகாரிக்கு என்ன தோன்றியதோ.. “சரி.. சரி.. போ” என்று துரத்தி விட்டார்.
”எங்கே போன.. உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்களே இண்டர்வியூவுக்கு” என்று நண்பர்கள் வந்து சொன்னார்கள். பக்கத்தில் இருந்த அறைக்குள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தேன். பார்த்தால் ஏற்கனவே பார்த்த அதே அதிகாரி அங்கே அமர்ந்திருந்தார்.
“என்னை இண்டர்வியூவுக்கு கூப்பிட்டீங்களாம் சார். நான் ‘அங்கே’ போயிட்டேன். அதான் வர முடியலை” என்றேன்.
“பேரு என்ன? ரமேஷ்குமாரா?” என்று கேட்டு விட்டு, பதிலுக்குக் கூட காத்திராமல், “எல்லாரையும் முடிச்சிட்டுத்தான் உன்னை இனிமே கூப்பிட முடியும். வெளியிலே போய் உட்காரு. திரும்பவும் கக்கூஸுக்கு போயிடாத” என்றார்.
“திரும்பவும் வந்தா என்ன செய்யுறது?” - என்று இப்போதாக இருந்தால் கேட்டிருப்பேன்தான்.
ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக் கொண்டு, “சார்.. நாங்க எல்லாருமே வெளியூரிலேருந்து வந்திருக்கோம். பாதிப் பேரு குளிக்கக்கூட இல்லை. அதாச்சும் பரவாயில்லை. கக்கூஸ் போகணுமுன்னா என்ன செய்யுறது? காலையிலேருந்து எல்லாரும் கேட்டு சலிச்சு போயிட்டோம்” என்றேன்.
என்ன நினைத்தாரோ.. யாருக்கோ இண்டர்காமில் அழைத்து என்னவோ சொன்னார். என்னை வெளியில் காத்திருக்கச் சொன்னார். சற்று நேரத்தில் வெளியில் இருந்த மாணவர்கள் பகுதிக்கு வந்த ஒருவர், “யாருக்காச்சும் கக்கூஸ் போகணும்ன்னா நேரா போய் கடைசி வலது பக்கம் போய் திரும்பினா இருக்கும். அங்கே போங்க” என்று சொன்னார். அடுத்த நொடி நான்கைந்து பேர் எழுந்து ஓடினார்கள். பாவம்.. எவ்வளவு நேரம்தான் பொறுத்துக் கொள்வார்களாம்?!
மதியம் ஒன்றரை மணி ஆனது. நேரடித் தேர்வு நடத்திய மூன்று அதிகாரிகளும் சாப்பிடப் போனார்கள். நாங்களெல்லாம் உட்காந்திருந்தோம். அதற்குள் என்னுடன் கூட வந்த என் வகுப்புத் தோழர்கள் 5 பேரில் 4 பேருக்கு இண்டர்வியூ முடிந்திருந்தது. எல்லோரையும் சாப்பிட அழைத்தனர்.
ஊழியர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு எங்களை அழைத்து சாப்பாடு போட்டனர். 15 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர். அனைவரும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்கள். சாப்பாடு ஹாலுக்கும் இண்டர்வியூ நடந்த இடத்திற்கும் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
நானும் நண்பரொருவனும் திரும்ப வந்து கொண்டிருந்த போது வழியில் ஒரு அறையிலிருந்து வெளியே வந்த ஒருவர், “இண்டர்வியூவுக்கு வந்த பசங்களாப்பா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றவுடன், “வந்து டிக்கெட் காசு வாங்கிட்டுப் போங்க. மீதி இருக்குற எல்லார்கிட்டயும் வந்து வாங்கிக்கச் சொல்லுங்க” என்றார். போய் அவர் காட்டிய இடத்தில் பெயர் எழுதி கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த போது, “இண்டர்வியூ முடிச்சவங்களை மட்டும் வரச் சொல்லு. நீ முடிச்சிட்டதானே?” என்றார்.
“முடிச்சிட்டேனே” என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். போக, வர பேருந்துக்கு அப்போது 40 ரூபாயோ என்னவோ. ஆனால் 100 ரூபாய் தந்தனர். இண்டர்வியூ நடந்த இடத்திற்குச் சென்ற போது மீதமிருந்த நண்பனுக்கும் இண்டர்வியூ முடிந்திருந்தது. சொல்லப் போனால் என் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்த அனைவருக்குமே முடிந்திருந்தது - என்னைத் தவிர. மீதி ஊர்களில் இருந்து வந்தவர்களில் இன்னும் சுமார் 100 பேர் போல இருந்தார்கள். அனைவருக்கும் முடித்து விட்டுதான் என்னைக் கூப்பிடுவார்கள் என்றால் எப்படியும் ஆறு மணியாகி விடுமே என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இது ஒரு தண்டனையாகத் தோன்றியது எனக்கு. அப்படி என்ன கொலைக்குத்தம் பண்ணி விட்டோம்? என்றும் கோபம் வந்தது.
அப்போதே மணி நான்கு இருக்கும். நண்பர்களிடம் திரும்பினேன். “வாங்க கிளம்பலாம்”
“என்னடா சொல்லுற... உனக்கு இன்னும் இண்டர்வியூ நடக்கலையே” என்றனர்.
“பரவாயில்லை. இண்டர்வியூவே பண்ணாம எனக்கு வேலை கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்” என்றேன் தீர்மானமாக. இதற்கு மேல் இண்டர்வியூ நடந்தாலும்.. தப்பித்தவறி நான் அதில் ஒழுங்காக பதில் சொன்னாலும்.. என்னை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றும் தோன்றியது. தவிர அப்போதைய சூழ்நிலையில் அவர்கள் தேர்ந்தெடுத்தாலும் கூட பணியில் சேரும் மனநிலையில் இல்லை. மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆனாலும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் இண்டர்வியூவுக்கு தானாகவே கூப்பிடுவதால் அதைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.
எங்கள் பள்ளிக்கூட மாணவர்களில் ஒருவனுக்கு மட்டும் அப்போது வேலை கிடைத்ததாக ஞாபகம்.
“டிக்கெட் காசெல்லாம் வேற வாங்கிட்ட. இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலைன்னா ஸ்கூலுக்கு சொல்லிடப் போறாங்க” என்று நண்பர்கள் மிரட்டினார்கள்.
“சொன்னா சொல்லிக்கட்டும் விடுங்கடா” என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஊர் சுற்றிப் பார்க்க பெங்களூரு கிளம்பினோம்.
ஆனால் அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடத்தில் எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், “டிக்கெட் காசை வாங்கிட்டு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாம வந்திட்டியேமேடா.. டைட்டனிலேருந்து லெட்டர் போட்டிருக்காங்க” என்றார்.
டைட்டன் நிறுவனத்தில் அமர்ந்திருந்த போது வயிற்றைக் கலக்கியதை விட இப்போது அதிகமாகக் கலக்கியது.
"உண்மையைச் சொல்லுடா. நிஜமாவே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலையா?” - மிரட்டலாகக் கேட்டார் அந்த ஆசிரியர்.
“ஆமாம் சார்”
என்னை தரதரவென்று அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அறைக்குச் சென்றார் அவர். அங்கே இன்னும் நான்கைந்து ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர்.
“டைட்டன் கம்பெனியிலே இண்டர்வியூவுக்கு போயிட்டு டிக்கெட் பணத்தை மட்டும் வாங்கிட்டு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாம வந்திருக்கான் இவன்” என்று புகார்ப்படலம் வாசித்தார் அந்த ஆசிரியர்.
ஏனைய ஆசிரியர்கள் ஒருவித அலட்சியமான சிரிப்புடன் என்னைப் பார்த்து, “அப்படியாடா?” என்று குசலம் விசாரித்தனர்.
“ஆமாம் சார்” என்றேன்.
“ஏன் அப்படிச் செஞ்சே?” - அழைத்துச் சென்ற ஆசிரியரே கேட்டார்.
நான் நடந்த சம்பவங்களைச் சொன்னேன். முந்தைய அத்தியாயத்தில் அந்தச் சம்பவங்களை நீங்கள் எப்படி விழுந்து விழுந்து சிரித்து படித்தீர்களோ.. அதற்கு சற்றும் குறைவில்லாமல் நான் சொன்னதை விழுந்து விழுந்து சிரித்து கேட்டார்கள் அந்த ஆசிரியர்கள். அதுசரி.. நமக்குத்தானே வயித்துவலி.
“இப்போ அவங்க உன் மேலே போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறாங்களாம்டா. டைட்டன் ஓனர் லெட்டர் போட்டிருக்காரு ஸ்கூலுக்கு. இப்போ என்ன செய்யலாம்?” - கேட்டார் என்னை அழைத்துச் சென்ற ஆசிரியர்.
இப்போது எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தது. சரிதான்.. நம்ம கூட வந்த பயபுள்ள எவனோ நம்மளைப் போட்டுக் கொடுத்திருக்கிறான். நூறு ரூபாய்க்கெல்லாம் அந்த டைட்டன் கம்பெனிக்காரங்க போலீஸ் புகாரெல்லாமா கொடுப்பாங்க என்று புரிந்தது.
“அப்படியா சார். கொடுக்கட்டும் சார். நானும் மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் கொடுக்கலாமுன்னு இருக்கேன்” என்றேன்.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல சிரிப்பை நிறுத்தினர்.
நான் ஏற்கனவே சொன்னது போல நான்தான் (அந்தக்கால) ஜூனியர் விகடனின் பரம வாசகனாச்சே. எனவே மனித உரிமைக் கமிஷன் போன்ற வார்த்தைகளெல்லாம் அத்துப்படி!
“என்னது.. மனித உரிமைக் கமிஷனிலேயா?” - ஆச்சரியத்துடன் கேட்டனர்.
“ஆமாம் சார். அன்னைக்கு அத்தனை பசங்களையும் எவ்வளவு அவஸ்தை பட வெச்சாங்க தெரியுமா சார்? தவிர 18 வயசானால்தான் வேலைக்கே எடுக்க முடியும். இப்பவே வேலைக்கு கூப்பிட்டால் அது சின்னப் பசங்களை வேலைக்கு வைத்த குற்றமாகும் சார். என்னதான் அவங்க 2 முடிச்சப்புறம் வேலை கொடுக்குறேன்னு சொன்னாலும், இப்பவே இண்டர்வியூவெல்லாம் செய்யுறதே தப்பு சார். இதுலே என்னை மிரட்டி ஸ்கூலுக்கு புகார் வேற கொடுத்திருக்காங்களா.. அதையும் சேர்த்து கேள்வி கேட்டு புகார் அனுப்பிடப்போறேன் சார்” என்று போட்டேன் ஒரு போடு.
இப்போது என்னை அழைத்துச் சென்ற ஆசிரியருக்கு லேசாக வியர்த்தது. “படிக்கிற உனக்கு எதுக்குடா இந்த வம்பெல்லாம்? நாங்க டைட்டன் கம்பெனியிலே சொல்லிக்குறோம். நீ கவலைப்படாத.. நீ போ” என்றார் என்னிடம்.
“நான் ஏன் சார் கவலைப்படணும்? நான் ஒண்ணும் தப்பு பண்ணலை சார். ஆனா அவங்களை விடக்கூடாது சார்” என்றேன்.
என்னை வைத்து நக்கலடித்து ரசித்து சிரிக்கலாம் என்று பெரிய திட்டம் போட்டு வைத்திருந்த அவருக்கோ பிரச்னை பெரிதாகி விடுமோ என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது. என்னை சமாதானப்படுத்தி அவரே வகுப்பறைக்கு அழைத்து வந்தார். வரும் வழி நெடுகில் அட்வைஸோ அட்வைஸ்.
“நீ எவ்வளவு நல்லவன்.. வல்லவன்.. அவங்களையெல்லாம் மன்னிச்சு விட்டுடு” என்று!
பொதுவாகவே அந்த ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் டெரர் என்று பெயரெடுத்தவர். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘வாய்யா மனித உரிமை கமிஷன்” என்றுதான் கூப்பிடுவார். நானும் அவருக்கு ‘டைட்டன் வாத்தியார்’ என்று பெயர் வைத்திருந்தேன்.
அவரிடமே பிறகொரு சமயம் சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தார்.
(மீள் பதிவு)
#மாயவரத்தான்_புராணம் #TitanStory