நாட்டிலேயே முதன்முறையாக நகர்ப்புறக் கொள்கை வகுத்துள்ளது கேரள இடதுசாரி அரசு
கேரளாவை அடுத்த 25 ஆண்டுகளில் விரைவாக நகரமயமாக்குவதற்கான வளர்ச்சித் திசையை தீர்மானிக்க ஒரு நகர்ப்புறக் கொள்கையை இடது சாரிகள் தலைமையிலான அம்மாநில அரசு வகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக நகர்ப்புறக் கொள்கையை வகுத்த மாநிலம் என்கிற பெருமையை பெற்றதுடன் இடதுசாரிகள் ஆளும் மாநிலமே சரியான வளர்ச்சித் திசையில் செல்லும் என்பதையும் கேரளம் உறுதி செய்துள்ளது.
நகர்ப்புற கொள்கை உருவாக்கம் தொடர்பாக 2023-24ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் டிசம்பர் 2023இல் உருவாக்கப்பட்ட கேரள நகர்ப்புறக் கொள்கை ஆணையம், மார்ச் 2025 இல் முதலமைச்சரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, செப்டம்பரில் கொச்சியில் நடை பெற்ற உலகளாவிய மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் பரிந்துரை களும் இணைக்கப்பட்டன. தற்போது அந்தக் கொள்கைக்கு கேரள அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.
நகர்ப்புறக் கொள்கை ஆணையத்தின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் கேரளாவின் 80 சதவீதம் நகரமயமாக்கப்படும். மலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இடையேயான அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் நகர்ப்புற மேம்பாடு பரவலாக்கபபட்ட முறையில் பரவி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பின்னணியில், சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் உட்பட, நகர்ப்புற மேம்பாட்டிற்கான அறிவியல் அணுகு முறைக்கான அடிப்படை ஆவணமாக இந்தக் கொள்கை இருக்கும். அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும், அனைவருக்கும் வசதிகளை உருவாக்கும் ஒரு மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
சட்டங்கள் மற்றும் அமைப்புகளில் சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு, நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துதல், மக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இடம்சார்ந்த மற்றும் அடிப்படை திட்டமிடல் ஆகிய துறைகளில் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
#kerala #LDF #LeftisAlternative