ரங்கநாதன் தாத்தாவுக்கு 101 வயது பூர்த்தி ஆகிறது இன்று!
நான் வீட்டில் நான்காவது பையன். முதல் மூன்று அண்ணன்களும் மருத்துவ காரணங்களால் தவறி விட நான் நான்காவது. என்னை வளர்க்க பயந்த எனது தாய், தந்தை அப்பொறுப்பை என் தாய் வழி தாத்தாவான ரங்கநாதனிடம் கொடுத்தனர். தாத்தாவுடனே வளர்ந்தேன். குழந்தைகளுக்கு தாய், தந்தை ஹீரோவாக இருப்பார்கள், ஆனால் எனக்கு என் தாத்தா தான் ஹீரோ. Health Inspector ஆக இருந்து Retired ஆனதாலும், சிறு வயதில் ஹிந்து இயக்கங்களில் தீவிரமாக இருந்து அரசு வேலை கிடைத்தவுடன் ஈடுபாடு வெகுவாக குறைந்து விட்டது. சிறு வயதில் இருந்தே சங்க அறிமுகம் முதல் பா.ஜ.க அறிமுகம் வரை செய்தவர் என் தாத்தா தான். இன்னும் நன்றாக நியாபகம் இருக்கிறது நான்காம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு பேச்சுப்போட்டி. தலைப்பு - அரசியல் தலைவர்கள். என் வகுப்பில் அனைவரும் ஜெயலலிதா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், காமராஜர் என பேச நான் மட்டும் அத்வானி பற்றி பேசினேன். முதல் பரிசும் வாங்கினேன். Slam Book எனப்பட்டும் புத்தகம் 5-ஆம் வகுப்பில் அனைவரும் பெற்றனர். ஏனெனில் எனது பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு வேறு campus. அதனால் பலர் மாற்று பள்ளிகளுக்கு சென்று விடுவர். அந்த Slam Book-ல் கூட Favourite Political Leader இடத்தில் வாஜ்பாய், அத்வானி என இரண்டு பெயர்கள் தான் எழுதுவேன்.
அப்படி தொடங்கியது தான் என அரசியல் ஈடுபாடு. தாத்தாவின் இளைய சகோதரர் திருக்கோவிலூர் சுந்தரம் முழு நேர அரசியலுக்கு படிப்பு முடிந்தவுடனே இல்லத்தார் சம்மதமின்றி சென்று விட்டார். அது மிகப்பெரிய ஏமாற்றத்தை அதிருப்தியை எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தி, பிற்காலத்தில் நான் முழு நேர அரசியல் ஈடுபாடு கொண்டதை என் தாத்தா விரும்பவில்லை. அதை மீறி தற்போது அரசியலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய நாள் பழைய எண்ணவோட்டங்களை கண் முன்னே கொண்டு வந்தது. சிறு வயதில் எனக்கு தாத்தா செய்ததை எல்லாம் நான் அவருக்கு இன்று செய்யும் பாக்கியம் கிடைத்தது. காலையில் தாத்தாவை குளிப்பாட்டி, வீட்டில் சாமி கும்பிட்டு, உணவு ஊட்டிவிட்டு, மாலையில் கோவிலுக்கு அழைத்து சென்று, நண்பர்கள் மற்றும் கட்சி சொந்தங்களுடன் கேக் வெட்டி என என் சிறு வயதில் எனக்கு அவர் பண்ண அனைத்தையும் நான் செய்ய நேர்ந்தது.
நான் பல முறை எழுதியுள்ளதை போல் கடந்த வருடம் தாத்தாவின் 100-வது பிறந்தநாளை கொண்டாட முடியாதவாறு கொடுங்கோல் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறையிலடைத்தது. இன்று 101-வது பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பையும், சுதந்திரத்தையும் பெற்றதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அனைவரது அன்பு எனது அன்பு தாத்தாவிற்கு தேவை; கிடைக்கும் என நம்புகிறேன்.
கடவுளுக்கு நன்றி.