சட்டத்தின் ஆட்சி - உயர் நீதிமன்ற பாராட்டே சாட்சி!
கோவை மாவட்டம் சூலூரில் பள்ளி சிறுமி பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது.
விளாத்திக்குளம் படுகொலையைப்போல முகம் சுளிக்க வைக்காமல், சூலூர் மாணவியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது முதல் முழுக்க முழுக்க காவல் விசாரணை நடைமுறைகள் மிக மிக மிக நேர்த்தியாக நடைபெற்றது.
விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலை ஏற்று, மாநிலத்தின் காவல்துறை தலைவரான டிஜிபி அவர்கள் குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நேர்த்தியுடன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயர்நிலை அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என ஒரு பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் விவரங்களையும், சிறுமி படுகொலை செய்யப்பட்டது குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் போக்கையும் முழுமையாக ஆய்வு செய்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணை சரியானத் திசையில் சென்று கொண்டிருக்கிறது எனப் பாராட்டு தெரிவித்துள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உற்றுநோக்கலுக்குக் கீழ் நடைபெற்று வரும் விசாரணையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த மாண்பமை உயர்நீதிமன்றம், வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இப்பாராட்டும், சுட்டிக்காட்டலும் வெற்றிக்கழகம் பதவி ஏற்ற 19 நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என முதலைக்கண்ணீர் வடித்த முன்னாள் ஆட்சியாளர்களுக்கு காலம் தந்த பதிலடியாகும்.
போலிக்குற்றச்சாட்டுக்களை கண்டு பதற்றமோ பதைபதைப்போ இல்லாமல், அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு நடத்தப்படும் ஆபாச தாக்குதல் குறித்து கவலையும் நடுக்கமும் இல்லாமல்,
பெண்கள் நலம் என்ற பொறுப்பு உணர்வுடனும்,
குழந்தைகள் நலம் என்ற அக்கறை உணர்வுடனும்
செம்மாந்து நிற்கிறது வெற்றிக்கழக ஆட்சி என்பதற்கு இதுவே சாட்சி!
Source : Polimer News