குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு ஆட்சியிலும் இதே நிலையை பார்க்கிறோம். ஆளும் கட்சிகள் கையை பிசைந்து நிற்கின்றன அல்லது கடந்து செல்கின்றன. எதிர்கட்சிகள் இந்த வன்முறையை தேர்தல் காலத்தில் பிரச்சனையாக மாற்றி தமது ஓட்டு வேட்டையை நடத்துகிறார்கள்.
அதிமுக-திமுக-தற்போது தவெக என அனைத்து கட்சிகளின் ஆட்சியின் காலத்தில் இவை நடக்கின்றன. கடந்த 2025 செப்டம்பர் காலம் வரையில் கிட்டதட்ட 4967 போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு காவல்துறை FIR, chargesheetஉள்ளிட்டவற்றில் காட்டும் தாமதம் இத்தகைய தாமதத்தை கொடுக்கிறது. இது குற்றவாளிகளுக்கு ஏதோ ஒருவகையில் துணிச்சலை கொடுக்கிறது.
குழந்தைகள் மீதான வன்முறைக்கு பலவேறு சமூக காரணிகளும் உள்ளன. இவற்றைக் குறித்து எந்த கட்சியும் அக்கறைக் கொள்வதில்லை. இந்த சிக்கலை வாக்குவங்கிக்கான பிரச்சார சிக்கலாகவே பயன்படுத்துகிறார்கள். 2026 தேர்தலில் இதை முன்னிலைப்படுத்திய தவெக தற்போது எவ்வித விளக்கமளிக்காமல் இருக்கிறது. அப்படியெனில் இந்த சிக்கலின் மூலவேர் எது என கண்டறிவதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என அர்த்தமாகிறது.
முதல்வர் இந்த குழந்தையின் மீதான வன்முறை குறித்து வருத்தத்தையும், கண்டனத்தையும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை தேர்தல் பிரச்சனையாக பேசிய கட்சிகள் சமூகத்திலிருக்கும் காரணிகளை குறித்தும் பேசி இருந்தால் தீர்வை எட்டி இருக்கலாம்.
வன்முறையில் பலியானவர்கள் நம் குழந்தைகள். நம்மை நம்பி இப்பூவுலகில் அடியெடுத்து வைத்தவர்கள். இவர்கள் மீதான வன்முறைக்கு நீதி கிடைக்கவில்லையெனில் நம் சனநாயகம் வாழ்ந்தென்ன பயன்.
குவிந்துகிடக்கும் வழக்குகள் குறித்தும், அதிகரித்து வரும் வன்முறை குறித்தும் தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் வெளிப்படையாக பேசவேண்டும்..