தமிழ்த் திருச்சபைகளின் தொடக்கம், தமிழிசை வழிபாடு,
தமிழ் இறையியல் கல்வி, தமிழ் மொழி ஆய்வு, சைவ இலக்கிய ஆய்வு, வைதீகக் கடவுளர் ஆய்வு, அச்சுக் கலையின் அடித்தளம், காகிதத் தொழிற்சாலையின் முன்னோடி, பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மத நல்லிணக்க சிந்தனையின் முன்னோடி என பல அடையாளங்களுக்கு சொந்தக்காரர் சீகன் பால்கு.
1682 ஆம் ஆண்டு ஜூலை 10 ந்தேதி ஜெர்மனியில் பிறந்த சீகன், கிறிஸ்தவத்தை பரப்ப, தனது 24 வது வயதில் 222 நாட்கள் கடல் பயணம் செய்து தரங்கம்பாடியை வந்தடைந்தார்.
ஆனால், அப்போதைய இந்தியாவின் டேனிஷ் கவர்னர்
ஹேசியஸ், இறைப் பணியாற்ற வந்த சீகனுக்கு துளியளவும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கடலிலிருந்து சீகன் கரையேற படகு அனுப்ப மறுக்கப்பட்டது. காரணம், ஜெர்மனியில் இருந்து வரும் இவர் ,தன்னை வேவு பார்ப்பதற்காக டென்மார்க் மன்னரால் அனுப்பப்பட்டவராக இருக்கலாம் என்கின்ற சந்தேகம்.
3 நாட்களுக்குப் பிறகு கரை சேர்ந்த சீகனுக்கு தங்குமிடம், உணவு மறுக்கப்பட்டது.
தரங்கம்பாடி பகுதியில் உயர் குடி மக்களுக்கும்- ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் சாதிய பாகுபாடுகள் உச்சத்தில் இருந்த நிலையில்,
சீகன் எளியோர் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் தங்கி இறை வார்த்தையை எளிய மக்களோடு பகிர்ந்து கொள்ள துணிந்தார்.
தமிழறிந்தால் மட்டுமே அவர்களோடு பேசி பழகி இறைமகன் இயேசுவை குறித்து அறிவிக்க முடியும் என்பதை உணர்ந்த சீகன்,
சேரியின் சாணம் பூசிய
திண்ணைகளில் அமர்ந்து தமிழ் கற்றார். கடற்கரை மணலில் விரல் கொண்டு எழுதி தமிழோடு பழகினார்.நாளுக்கு 8 மணி நேரம் செலவழித்து இரண்டே ஆண்டுகளில் தமிழ் கற்றார் சீகன்.
சேரி திண்ணை பயிற்றுவித்த தமிழால் விவிலிய பரப்புரையா? என்று உயர் குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இதனை சமாளிக்க தமிழை, உயர் குடி வைதீகர்களிடமும் கற்றார்.
அதன் வாயிலாக தனது எழுத்துப்பணியை தொடங்கினார் சீகன்.
ஒரு கிறித்துவனுக்கும்,தமிழனுக்குமிடையே நடந்த உரையாடல், சிறிய பள்ளி நூல், அறநெறி இறையியல், தமிழ் அகராதி, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
திருக்குறள், நன்னூல், அரிச்சந்திர புராணம், பஞ்சதந்திர கதைகள், சிதம்பரம் மாலை, நளன் கதை, தேவாரம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சுவடிகளைப் படித்து இரண்டே ஆண்டுகளில் 40 ஆயிரம் சொற்கள் கொண்ட மற்றொரு தமிழ் அகராதியையும் உருவாக்கினார் சீகன் பால்கு.
தேவாலயங்களில் பாடுவதற்காகப் பல பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளை இயற்றினார்.
1711-ல், புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு வெளியிடும் பணியைத் தொடங்கினார்.
இதற்காக ஐரோப்பாவில் இருந்து அச்சு இயந்திரத்தை தருவித்தார்.
தமிழ் அச்சு எழுத்துகளை உருவாக்கினார்.
தமிழை, அச்சுத் தமிழாக்க சீகன் பால்கு முயற்சித்த காலத்தில் காகித பற்றாக்குறைய இருந்தது. அதனை எதிர்கொள்ள, பொறையாறில் காகிதப் பட்டறை ஒன்றையும் உருவாக்கி அதன் மூலம்,1715 ஜூலை 15-ல் தமிழில் ‘புதிய ஏற்பாட்டை ’ கொண்டு வந்தார் சீகன் பால்கு.
புதிய ஏற்பாடு மட்டுமின்றி தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார்.
பதிப்பு,
எழுத்தோடும் நின்று விடாமல், அப்போது சமூகத்தில் நிலவிய சாதிய பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சீகன் பால்கு.
பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள், டெய்லரிங் பள்ளி, விடுதிகள், நல்லிணக்கத்திற்கான சர்வ மத உரையாடல்கள் என எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட சீகன் பால்கு, தமிழ்நாட்டில் வாழ்ந்தது சொற்ப காலங்கள் என்றாலும்,
அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியவை.
ஆம்!தமிழ் சமூகம் தலை நிமிர்ந்து வாழ பாதை அமைத்துக் கொடுத்தவர்களில் முன்னவர் சீகன் பால்கு.
அதற்காக தமிழ் சமூகம் தலை வணங்கி அவருக்கு நன்றி செலுத்துகிறது.
#SikkanBalgu
#SikkanBalguRemembrance
#InterfaithHarmony
#ReligiousHarmony
#UnityInDiversity
#PeaceAndBrotherhood
#HarmonyOverHate
#TamilSociety
#LegacyOfPeace
#RespectAndUnity
#SocialHarmony
#RememberingSikkanBalgu
#TamilHistory
#HumanityFirst